பிணிகளை மறந்து இரு !!

அன்பும் அருளும் பெருக்கெடுத்து ஓடி,
வாடிய பயிரைக்கண்டு தானும் வாடி,
தேடித்தேடி உதவி, உயிர்களை நாடி
வாழ்ந்துகாட்டிய புனிதர்களை வணங்கி இரு !! …1

தானும்உலகும் இறையதனைப் பிரியாது
காணும் உயர்பதவியதை அறியாது
அல்லல்படும் அனைவரையும் அரவணைத்துக்
கருணையுடன் வாழ்வுதனைக் கடந்து விடு !!            …2

மனிதர்களை அல்லல்படுத்தும் பிணிகள் பல !
போட்டி, குறைகூறல், பொறாமை, தன்பயம்,
தன்கடமை-மறத்தல் போன்ற சில ! முடிந்தால்
அவர் நோய்க்கு மருந்து கொடு !!                      …3

கைகோர்த்துப் பயணிக்க வழியிருந்தும்
மெய்யோடு உயர்சேவை செய்யுமிடத்து
கால்தடுக்கி போட்டிக்குன்னை இழுப்பாருண்டு -
அவர்களை கண்டுநீ புன்னகைத்து இரு !!            …4

இதுஅழியும் அதுஉடையும் என்றுரைத்து
உனக்குள்ளும் சந்தேகப் பிணி விதைப்பர்.
அப்படியும் மனிதர்கள் இருப்பதுண்டு -
அதனையும் எதிர்கொண்டுநீ விழித்து இரு !!             …5

இதுசரியில்லை அதுநிறையில்லை என்றுரைத்து
இல்லாத வழக்கொன்று நடத்திடுவர்;
குறைகூறி வாழ்வார்கள் மத்தியிலும்
நிறையை மட்டும்நீ நினைத்து இரு !!                  …6

உனக்குமட்டும் எனக்குமட்டும் என்றுரைத்து
உப்புக்குதவாத உலகியல் விஷயங்குறித்து
பொறாமையெனும் பொல்லாத கல்லாலடிப்பர்;
அதனையும் ஏற்றுநீ அமைதியாய் இரு !!               …7

மலைபோலச் சேவைசெய்வோர் மத்தியிலும்
பண்டுசெய்த ஒன்றனையே பாடிப்பாடி
ஜம்பமெனும் மனப்பிணியால் பதைபதைப்பர்;
அதனையும் கண்டுநீ பொறுத்து இரு !!                 …8

இல்லாத சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு
தந்நிலைக்கு ஆபத்தாய் உலகைக்கண்டு
நம்பிக்கையின்றி தன்பயத்தால் தவித்திடுவர்;
அவர்களையும் கைகொடுத்து தூக்கி விடு !!           …9

சொல்லும் செயலும் ஒன்றேயானாலும்
இடமும் ஏவலும் வலிமைகூட்டும் - சிலர்தன்
நிலைவலிமை உணராது மிதித்திடுவர்;
அவரையும் கடந்துநீ நிமிர்ந்து இரு !!                …10

உயர்நோக்கில் பல ஊழியம் கிடந்தாலும்
பொறுப்பென்று ஒப்படைத்து ஊதியம் கொடுத்தாலும் - சிலர்தன்
பயன்நோக்கி மட்டுமே காரியம் செய்வர் - அவர்நடுவே
கடமையைச் செய்துதலை நிமிர்ந்து நட !!             …11

இப்பிணி கொண்டோரெல்லாம் தாழ்ந்தவருமில்லை;
பிணியேயில்லாத மனிதப் பிறவியுமில்லை;
அனுபவப் பள்ளியிலே அவரவர்க்கு தனிவகுப்பு.
இதுவே உலகியல்பு உணந்து இரு !!                  …12

பிணிகொண்ட அனைவரையும் வேற்றுமைநீங்கி
தமையனாய் தாமேயாய் உணரும்போது
கண்ணில் தென்பட்ட அவர்கள் பிணி - உன்
நெஞ்சில் நில்லாது மறந்து இரு !!                    …13

Recent Comments:

  1. Wow 🙂 what a thought ! நீ கொடுத்த பால் ஒன்றும் எனக்கு வேண்டாம்; என் ஐயன் உதிர்த்த தேவாரம் ஒன்றே போதும் !

  2. அருமை! அருமை!! -EEE – Experience / Education / Environment is the deciding factor for our living . வாழ்க பல்லாண்டு வளர்க…

Other Posts:

One thought on “பிணிகளை மறந்து இரு !!”

Leave a comment