(நாற்) புறம் காட்டும் கண்ணாடி

பிறப்பிலிருந்து தெரியும் காட்சி !
ஓயாமல் தெரிவது அதன் மாட்சி ! அந்தக்
காட்சி தான் உலகமென்று – நம்மை
உழல வைப்பது தான் சூழ்ச்சி !!

காட்சி தெரியும் திரையைக் கொஞ்சம்
உற்றுப் பார்த்தால் கண்ணாடி – அது
காட்டுபவனும் இல்லை காண்பவனும் இல்லை !
நாற்புறமும் காட்டும் வெறும் கண்ணாடியே.

தெற்கிலே சவம் காட்டி,
சவத்திலே நாட்டம் கூட்டி,
வாலிபத்தையும் வயோதிகத்தையும் – எனதாகக்
காட்டி நின்ற கண்ணாடி.

கிழக்கிலே ‘நாளை’யைக் காட்டி,
நாளையிலே எதிர்பார்ப்பை கூட்டி,
இன்றையையும் இப்போதையையும்
மறைத்து நின்ற கண்ணாடி.

மேற்கிலே நேற்றைக் காட்டி
ஞாபகமெனும் தோற்றம் கூட்டி,
காலமெனும் பிம்பத்தில் எனை
மயங்கச் செய்த கண்ணாடி.

தெற்கும் கிழக்கும் மேற்கும் காட்டும்
காட்சியிலேயே களிக்கச் செய்து
வடக்கும் காட்டும் என்பதனை
மறைத்து நின்ற கண்ணாடி.

கண்ணாடியில் பிழையில்லை;
திசைகளிலும் குறையில்லை;
காட்சிக்கான நேரம் வந்தால்
வடக்கும் காட்டும் கண்ணாடி.

புறம் காட்டும் கண்ணாடி
சகம் காட்டுமென் றுணர்ந்தபின்
வடக்கில் இருந்த அவனைக் காண
அகம் நோக்கி இருந்தேனே.

முந்நூறு கோடி மணிநேரம்
உலகமெல்லாம் காட்டிய பின்பும்
மூன்று நொடிப்பொழு தேனும் – அகம்
காட்டத் தயங்கிய கண்ணாடி.

நாளையையும் நேற்றையும் முழுதும் நீக்கி
இந்நொடியைக் காண விழைந்தேனே;
‘நான்’ஐயும் எனதையும் சற்றுநீக்கி
தேற்றம் பெற அழைத்தானே.

மலம் படிந்த பார்வையினால் – காட்சி
கலங்குமென் றுணர்ந்தேனே;
சவம் பார்த்த கண்ணாடியிலேயே
சிவமும் காண நின்றேனே.

கண்ணும் காட்சியும் கண்ணாடியும்
காட்டுபவனும் காண்பவனுமென்று எல்லோமும்
வெவ்வேறு என்று இல்லாது
காணும் நாள் எந்நாளோ ?

Leave a comment