தேங்க்ஸ்

“ஏய் லலிதா ! அக்காவ மூணு மனிக்குத் தான் பொண்ணு பார்க்க வறா.  இன்னும் நாலு மாசத்துல பத்தாவது எக்ஸாம் வருது, போய் படிடி ! அப்பா மாதிரி பெரிய சார்டர்ட் அக்கெளண்ட்ண்டா வரனும் நீ !”,  அம்மா கிட்சென்லேர்ந்து சத்தம் போட்டாள்.

எங்கப்பா கிட்ட எனக்கு பிடிச்சதே அவரோட சுறுசுறுப்பு தான்.  ஆபிஸ், ப்ரெண்ட்ஸ், கோயில்னு எதாவது பிஸியா இருந்துண்டே இருப்பார்.  அதுனால தான் என் ஸ்கூல் பிராஜெக்ட்ல நான் டாப் கிரெட் வரிசயா மூணு தடவ வாங்கியிருந்தாலும் இன்னும் ஒரு தடவை கூட அப்பா என் பிராஜெக்டை பாக்கல.  அவர் பிஸி, அவரை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவா.

இன்னிக்கு மத்யானம் என் அக்கா புவனாவை பொண்ணு பாக்க மாப்பிள்ளை ஆத்துக்காறா வறப்போறா. அதனால எல்லாரும் ஆத்துல பிஸி.  இப்பதான் கூடத்துல எக்ஸ்ட்றா சேர் கொண்டு வந்து போட்டேன்.  சம்பு பாட்டி காத்தாலயே நல்ல புடவையா கட்டிண்டு கட்டில்ல வந்து உக்காந்துண்ட்டா.

“ஏண்டி லல்லி, எத்தன மணிக்கு வராளாம் அவாள்லாம் ?” சம்பு பாட்டி பத்தாவது தடவயா மெல்லிசு குரல்ல கேட்டா.  “மூணு மணிக்காம் பாட்டி”, நான் கொஞ்சம் கத்தி சொன்னேன்.  பாட்டிக்கு எண்பது வயசாயிடுத்து.  காது கிட்ட போய் பேசினாத்தான் புரியும்.

“புவனா, என்னோட நீல கலர் பட்டுப்புடவைய தானே கட்டிக்க சொன்னேன் ? இந்த பாலியிஸ்டர் புடவையை கட்டிண்டு வர ?” அம்மா கோபமா கேட்டாள்.  அக்கா பதிலே சொல்லலை.  அக்கா அழுத்தக்காரின்னு அம்மா அடிக்கடி சொல்லுவா”

மணி மூணு பத்து.  அப்பா மொபைலும் கையுமா எங்காத்துக்கு வழி சொல்லிண்டிருந்தார்.

“வாங்கோ.  வாங்கோ.  ப்ளீஸ் கம்.  யூ ஷுட் ஹவ் டேகன் த பஸ்ட் லெப்ட் அப்டர் த சிக்னல்” அப்பா செம குஷியா இருந்தார்.  மாப்பிள்ளை ஆத்துக்கு ரெண்டு மூணு தடவை ஜாதகம் சம்பந்தமா போய் மாப்பிள்ளையோட அப்பாவை ஏற்கனவே பாத்திருக்கார்.

“இவதான் என் தங்கை ரமா.  ஷ்யாமோட அத்தை.  சுந்தரம் பைனான்ஸ்ல வேலை பாக்கறா.  இவ கொலீக் மூலமாத்தான் உங்காத்து ஜாதகம் கிடச்சது.”  மாப்பிள்ளையோட அப்பா இன்ட்ரொடியூஸ் பண்ணினார்.  மாப்பிள்ளை ஷ்யாம் அடக்க ஒடுக்கமா உக்காந்துண்டிருந்தார்.  கொஞ்சம் ஒல்லி தான்.

மாப்பிள்ளையோட அம்மா எங்க அம்மாகிட்டேர்ந்து ஒரு தாம்பாளம் வாங்கிண்டு, தட்டு நிறைய வாழைப்பழம், ஆப்பிள், வெற்றிலை பாக்கு, கல்கண்டு ன்னு ஒன்னொன்னா அடுக்கினார்.  அவா கைல இருந்த கட்ட பையிலேர்ந்து ஒரு குமரன் சில்க்ஸ் புடவை டப்பா எடுத்தார்.  மாப்பிள்ளையோட தாத்தா ‘அப்புறம்’ ங்கறாமாதிரி கையசைத்தார்.  குமரன் சில்க்ஸ் டப்பா மறுபடியும் கட்ட பைக்குள்ள போயிடுத்து.

ரமா அத்தையின் குழந்தை கிருஷ்ணா அழகாயிருந்தது.  மூணு வயசாம்.  ரமா அத்தை மடியிலயே உக்காந்துண்டிருந்தது.  நான் கூப்பிடகூப்பிட வரவேயில்ல.  

எல்லாரும் இன்ட்ரொடக்‌ஷன்ஸ் ஆச்சு.  புவனாக்கா வந்து எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணினாள்.

மாப்பிள்ளையோட தாத்தா கடிகாரத்தை மறுபடியும் மறுபடியும் பாத்துண்டே இருந்தார்.  “பொண்ணும் பையனும் தனியா பேசிக்க அனுப்பலாமே.  நாலரை ராகுகாலத்துக்கு முன்னாடி,…  பேசிண்டதுக்கு அப்பறம் நாலரைக்கு முன்னாடி நம்ப தாம்பூலம் மாத்திண்டுடலாம்”, தாத்தா சொன்னார்.

எங்க ஸ்டடீ ரூம்ல தான் புவனாக்காவும் ஷ்யாம் மாமாவும் பேசிக்க போனா.  

எங்க அப்பா தன்னோட பூர்வீக கிராமம், அவரோட தாத்தா, குல தெய்வம் கோயில்னு ரொம்ப மலர்ச்சியா பேசிண்டிருந்தார்.  அம்மாவும் நானும் எல்லாருக்கும் கேசரி கொடுத்தோம்.  குட்டி கிருஷ்ணா கேசரியை ஆசையா சாப்பிட்டது.

தாத்தா கடிகாரத்து மேல ஒரு கண்ணோடவே தான் இருந்தார்.  முடிஞ்சா அந்த பெரிய முள்ளை பிடிச்சு நகர விடாம வெச்சிருந்திருப்பார்ன்னு எனக்கு தோனித்து.

சம்பு பாட்டி பேசறவா முகத்தெயெல்லாம் மாத்தி மாத்தி தலை அசைச்சுண்டே பாத்துண்டிருந்தா.  பாட்டிக்கு எதுவும் காதுல விழுந்திருக்கும்னு எனக்கு தோணலை.

எல்லாரும் கேசரியை பினிஷ் பண்ணிட்டு காபி சாப்பிட்டுண்டு இருந்தா.

புவனா அக்காவும் ஷ்யாம் மாமாவும் வெளியே வந்தா.  ஷ்யாம் மாமாவுக்கு கேசரி கொண்டு கொடுத்தேன்.  அவர் அதை டேஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அவர் அப்பாவோட வெளில எக்ஸ்க்யூஸ் சொல்லிட்டு போனார்.

அஞ்சு நிமிஷம் கழிச்சு உள்ள வந்தார்.  கிருஷ்ணா ஓடிப் போய் அவர் காலை கட்டிண்டது.

மறுபடியும் ஷ்யாம் மாமாவும் அவர் அப்பாவும் வெளியே போனா.  இந்த தடவை எக்ஸ்க்யூஸ் சொன்னது அவர் அப்பா.  எங்க அப்பா முகத்துல ஒரு அன்க்சைட்டி தெரிஞ்சது.  

“மாமா, நம்ப மையின் அப்ஜெக்டிவ் பையனையும் பொண்ணையும் மீட் பண்ண வைக்கறதுதான்.  அது ஆயிடுத்து.  நம்ப இன்னிக்கு அவாள்ட நன்னா பேசிண்டு நாளைக்கு போன்ல மேற்கொண்டு பேசி முடிவெடுக்கலாம்”, என்றார் ஷ்யாம் மாமாவோட அப்பா.  

எங்க அப்பா முகத்துல களையே போயிடுத்து.  எனக்கு என்னது புரியலை.

மாப்பிள்ளையோட அம்மா கட்ட பையை காண்பிச்சு ஜாடையா எதோ கேட்க, மாப்பிள்ளையோட அப்பா ‘அப்புறம்’ ங்கறா மாதிரி கையசைத்தார்.  கிருஷ்ணா செகண்ட் ரெளண்ட் கேசரி சாப்பிட்டுண்டு இருந்தான்.  

கொஞ்ச நேரத்துல எல்லாரும் போயிட்டு வறேன்னு கிளம்பினா.  மாப்பிள்ளை ஷ்யாம் மாமாவும் போயிட்டு வறேன்னு சொன்னார்.  புவனா அக்கா கிட்சன் வாசல்லேர்ந்து எட்டி பார்த்து தலை அசைத்தாள்.  ஷ்யாம் மாமாவுக்கு கொடுத்த கேசரியையும் காபியையும் நான் உள்ளே கொண்டு போய் வெச்சேன்.

அவாள்லாம் போய் பத்து நிமிஷத்துக்கு மேல ஆயிடுத்து.  “சோமு, என்னடா ஆச்சு ?” சம்பு பாட்டி மெல்லிசா கேட்டுண்டே இருந்தா.

“என்ன பேசிண்டேள் ?” அப்பா டல்லா புவனா அக்காவைக் கேட்டார்.  அக்கா ரொம்ப நேரம் பேசவேயில்லை.

“கொஞ்சம் வாயத் தொறயேண்டி”, அம்மா டென்ஷனா கேட்டாள்.

“அவன் தெனாவட்டா பேசறாம்பா”

அப்பா அதிர்ச்சியாயிட்டார்.  ‘தெனாவட்டு’ – எங்காத்துல அடிக்கடி யூஸ் பண்ணாத வார்தை.  

அப்பா துருவித்துருவி கேட்டார்.  புவனா அக்கா பாதி கேள்விக்கு அமைதியா இருந்தாள்.  அப்பாவோட கேள்விகளுக்கு யூசுவலா பதில் சொல்றதே கஷ்டம்தான்.

“நீ கோ எஜுகேஷன்ல படிச்சியா ? உனக்கு பாய் ப்ரெண்ட்ஸ் இருக்குமே “, அப்படின்லாம் கேக்கறாம்பா. எனக்கு அவன் இண்டீசண்ட் கேள்விகளே பிடிக்கல.  எனக்கு இப்படி ஒரு ஹஸ்பண்ட் வேணாம்பா’ன்னு ஓ’ன்னு அழுதாள் புவனா அக்கா.

“ஏய் லல்லி.  நீ உள்ள போய் படிக்கறயா இல்லையா” அப்பா என்னை பார்து ரொம்பவே கடிஞ்சு சொன்னார்.  நான் ஒடிப்போய் ஸ்டடி ரூம்லேர்ந்து ஒரு புக் எடுத்துண்டு பாட்டி பக்கத்துல உக்காந்துண்டேன்.  புக்கைத் திறந்தேன்.  படிக்க முடியல.  ஏதோ பிரச்சனைன்னு புரியறது.  ஆனா முழுசா புரியலை.

“சோமு, என்ன ஆச்சுடா ?” பாட்டி மெல்லிசா கேட்டா.

“பாட்டி, அவாள்லாம் பேசிண்டிருக்கா.  புவனா அக்காவுக்கு பையனை புடிக்கலையாம்.  பையன் கொஞ்சம் கலர் கம்மியாம்”, நான் சொல்லி பாட்டியை சமாதானம் படுத்தினேன்.  “ஆமாம்.  இவ மட்டும் என்ன சரோஜா தேவி சிவப்பாக்கும்”, பாட்டி புலம்பினாள்.  “உங்கக்காவுக்கு ரொம்ப தான்.  இந்த காலத்துல நல்ல சம்பந்தமா ஜாதகம் பொருந்தி வர்றதே கஷ்டமாயிருக்கு”

டின்னர்ன்னு எல்லாரும் சேர்ந்து உக்காந்துண்டு சாப்பிடல.  அப்பா ரொம்ப கோபமாவே இருந்தார்.  புவனா அக்கா அடிக்கடி டாய்லெட் போயிட்டு மூஞ்சி அலம்பிண்டு வந்தாள்.  என் கிட்ட கூட சரியா பேசவே இல்ல.

மறுநாள் காத்தால அப்பா ஆபிசுக்கு கிளம்பலை.  அவர் கண் ரொம்ப சிவந்திருந்தது.  கோபமாவே இருந்தார்.  யாருக்கோ ஃபோன் பண்ணி ரொம்ப கோபமா பேசினார்.  “என்ன பையன் வளர்த்திருக்கா?  இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் உங்க கொலீக்குக்கு ஜாதகம் கொடுக்கவே அனுமதிச்சிருக்க மாட்டேன்” என்று பொரிஞ்சு தள்ளி ஃபோனை வச்சிட்டார்.  

அப்பாக்கு இருந்த கோபத்துக்கு அவர் முகத்தை பாக்கவே எனக்கு பயமா இருந்தது.  இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா.  எனக்கு ஒன்னும் புரியவேயில்லை.  நான் எனக்குள் பொலம்பிண்டேன்.

புவனா அக்கா பக்கத்துல இருக்கற பிள்ளையார் கோவிலுக்கு கிளம்பிட்டாள்.

பத்து நிமிஷம் கழிச்சு ஃபோன் பெல் அடிச்சது.  நான் தான் எடுத்தேன்.  ஷ்யாம் மாமாவின் அப்பா குரல் போலிருந்தது.  அப்பா கிட்ட ஃபோனை கொடுத்தேன்.  

அப்பா சத்தமா ஆரம்பிச்சார்.  அப்புறம் அமைதியாயிட்டார்.  அம்மா ஓடி வந்து அப்பா பக்கத்துல நின்னுண்டாள்.  “உம்…. உம்….” ன்னு கேட்டுண்டே இருந்தார்.  “எனக்கு ஒன்னும் புரியலை சார்.  எது உண்மை, எது பொய்.  அப்படி ஏதும் நடந்திருந்தா, ஸாரி…ஸாரி…” ன்னு அஞ்சாறு தடவை ஸாரி சொல்லி ஃபோனை வெச்சார்.  அப்பா கண் கலங்கியிருந்தது.  

“அப்பா, என்னப்பா, ஏதாவது பிரச்சனையா ?” நான் போய் கேட்டேன்.  அப்பா ஓ’ன்னு அழுதார்.  அப்பா அழுது நான் பாத்ததே இல்ல. எனக்கும் அழுகை வந்துடுத்து.  ‘ஏன்னா, ஏன்னா’ ன்னு அம்மாவும் அழ ஆறம்பிச்சுட்டாள்.  

‘பெத்த பொண்ணை புரிஞ்சிக்க தெரியலயே” ன்னு மெல்லிசா சொல்லிண்டெ அழுதார்.  “புவனா யாரையாவது லவ் பண்றாளான்னு கேளு” ன்னு அழுதுண்டே அம்மாகிட்ட சொன்னார் அப்பா.

எனக்கு எல்லாம் புரிஞ்சா மாதிரி இருக்கு. நேத்திக்கு ஷ்யாம் மாமாவை பாத்து கிளம்பி போறப்ப புவனா அக்கா கிட்சன் வாசல்லேந்து தலையசைச்சதுக்கு ஒருவேளை “தேங்க்ஸ்” னு அர்த்தமோன்னு தோணித்து.

Leave a comment