நடிகனும் ரசிகன் தான் ! ரசிகனும் நடிகன் தான் !!

மேடையிலே கருவாகி மேடையிலே பிறந்து
குழந்தை நட்சத்திரம் ஆனேன்

அன்னையும் அப்பனும் ஆசிரியரும் நண்பனுமாய்
சுற்றத்தால் ஊக்கம் பெற்றேன்

மேடையிலே நட்பும் மேடையிலே காதலுமாய்
நாயகனாய் சுற்றி வந்தேன்

மேடையிலே போட்டி மேடையிலே போரென்று
வீரனாய் முழங்கி வந்தேன்

காட்சியே கருமம் மேடையே உலகமென்று
மீளா மயக்க முற்றேன்

மேடையா வாழ்கையா கனவா கற்பனையா
தெரியாமல் சுற்றி வந்தேன்

சூழ்நிலையால் தனித்துநின்ற காலத்தில் இறைநடிகர்கள்
கொடையையும் பெற்றுக் கொண்டேன்

இறைநடிகர்கள் அருளால் கனிவுகாட்ட மேடையிலேயே
தீராக்கடனும் பட்டுக் கொண்டேன்

பாத்திரத்திற்கேற்ற பண்பும் காட்சிக்கேற்ற உணர்ச்சியுங்கொட்டி
அனுபவம் பெற்று வந்தேன்

எத்தனையோ வழக்கும் வஞ்சனையும் சுடுசொல்லும்
ரத்தமும் கொலையும் கண்டேன்

எதற்கடா இத்தனை கூத்தும் பாட்டுமென்று
கேள்வியோடு சோர்வு முற்றேன்

எத்தனைக் காலம் இந்தக் குழப்பமென்று
செய்வதறியாக் கலங்கி நின்றேன்

அந்தந்த காட்சிக்கொரு காலமுண்டு; அதன்படி
ஆசான்களின் அருளைப் பெற்றேன்

நான்வேறு  நடிகன் வேறென்று பிரித்துப்
பார்க்கப் பழகிக் கொண்டேன்

நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளனாய் போயமர்ந்து
நடிகனுள்ளே அமைதி கொண்டேன்

காதலையும் காட்சியாய் கொலையையும் காட்சியாய்
கண்டுகளிக்கப் பழகிக் கொண்டேன்

கொன்றவனும் மடிந்தவனும் கைதட்டு முடிந்தவுடன்
நட்புடன் பழகக் கண்டேன்

நடிகனின் உணர்ச்சி ரசிகனுக்கு தேவையில்லை;
அமைதியாய் புரிந்து கொண்டேன்

காட்சியைக் கண்டு பதறாமல் ரசிக்க
வேண்டுமென்று புரிந்து கொண்டேன்

ரசிகனாய் மட்டுமே உட்கார முடியாது
கடமை அழைக்கக் கண்டேன்

ரசிகனானாலும் எப்பொழுதும் நடிக்க வேண்டிவரும்
என்றும் தெளிந்து கொண்டேன்

நடிகனும் ரசிகனுமாய் மாறிமாறி அனுபவித்து
பாரினுள் வலம் வந்தேன்

நான்மட்டும் நடிக்கவில்லை சகநடிகர்கள் சேர்ந்ததுதான்
வாழ்க்கையென்று புரிந்து கொண்டேன்

ரசிகனானாலும் நடிகர்க்கு நான்பட்ட தீராக்
கடனும் ஞாபகம் கொண்டேன்

இறைநடிகர் போல் ஒருபங்கேனும் நடிக்க முடியுமாவென்று
சிறிதுபோல முயற்சி கொண்டேன்

தோற்றாலும் ஜெயித்தாலும் கவலையில்லை; முயல்வதுதான்
முக்கியம் புரிந்து கொண்டேன்

முன்னாள் நடிகர்கள் இதைத்தெளிந்து கதையும்
கவிதையுமாய் வடிக்கக் கண்டேன்

அவரவர்கள் அனுபவப் பாடல்களை என்சுடர்க்கு
நெய்யாக்க ஆசை கொண்டேன்

ரசிகனாய் அமர்ந்துகொண்டு அடுத்த காட்சிக்கு
என்னைத்தயார் செய்து கொண்டேன்

காட்சிக்கு ஏற்றவாறு உணர்ச்சி பொங்க
நடிக்கும் கலைஞனும் ஆனேன்

தான் நடிக்கும் நாடகத்தை தானே ரசித்துப்
பார்க்கும் ரசிகனும் ஆனேன்

நடிகனும் ரசிகனுமாய் மாறிமாறி வாழ்க்கை-
மாணவனாய் என்னைக் கண்டேன்
  1. Wow 🙂 what a thought ! நீ கொடுத்த பால் ஒன்றும் எனக்கு வேண்டாம்; என் ஐயன் உதிர்த்த தேவாரம் ஒன்றே போதும் !

  2. அருமை! அருமை!! -EEE – Experience / Education / Environment is the deciding factor for our living . வாழ்க பல்லாண்டு வளர்க…

Recent Comments:

One thought on “நடிகனும் ரசிகன் தான் ! ரசிகனும் நடிகன் தான் !!”

  1. //காட்சியைக் கண்டு பதறாமல் ரசிக்க
    வேண்டுமென்று புரிந்து கொண்டேன்// 👍👍

    Like

Leave a comment